இதுவரை காலமும் பெற்றோரின் பேச்சுக்களை கேளுங்கள், அவர்களுக்கு செவிமடுங்கள் என்றே அனைவரும் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் முதல் முறையாக பெற்றோரின் பேச்சுக்களை கேட்காதே என்று கூறுவதால் பலருக்கும் வெறுப்பு வரும் என்று அறிகிறோம் .ஆனாலும் பெற்றோரின் பேச்சுக்களை ஏன் செவிமடுக்க வேண்டாம் என்பதை நாம் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில்,இப்போது நிலவிவரும் காலக்கட்டங்களில்,இங்கு உள்ள வாழ்வியல் கட்டமைப்பில்,தாயும் தந்தையும் தெய்வங்கள்.அவர்களே உலகம் என்றெல்லாம் தான் நமது வாழ்வியலை கொண்டு செல்கிறோம். இது தவறானது அல்ல. இவ் வளர்முக நாடுகளில் பின்பற்றிவரும் கலாச்சார விழுமியங்கள், தனிமனித ஒழுக்க பண்புகள் என்பனவே மனிதனின் அடிப்படையாக கொண்டு வாழ்க்கை முறைகள் அமைந்து வருகின்றன . இதற்க்கு அமைவாகவே நமது இயற்பியல் சட்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
மாறிவரும் உலகின் சமூகவியலை பொறுத்தவகையில் இன்றைய இளைய சமுதாயத்தினரின் பெரும் பிரச்சினை இந்த எழுதப்படாத விதிகளை பின்பற்றுவது ஆகும். பண்டைய காலம் தொட்டு பின் பற்றி வருவதால் அது சரியோ, தவறோ, பிடிக்குமோ, பிடிக்காதோ கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் சில விடயங்களை செய்து வருகின்றனர். இதனால் பலரும் மன ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகியும் உள்ளனர் என்பது வருந்தத்தக்க விடயமும் ஆகும்.
இன்றைய கால இளைய சமூகத்தினர் பலர் தற்கொலைக்கு ஆளாவதும், மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதும் அறியக்கூடியதாக உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கப் போனால் பெரும்பாலானவை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான முறுகல் என்பதே அடிப்படை பிரச்சினையாக அமைந்து விடுகின்றது. தாய் , தந்தை ஆகியோர் இளையவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்கு திணிக்கப்பட்ட பல விடயங்களை தமது பிள்ளைகளுக்கு அவர்கள் திணிக்க முற்படுவதுவும் , அதனை விரும்ப மறுக்கும் பிள்ளைகள் மனதளவில் பாதிப்படைவதும் அறியக்கூடியதானது.
கீ.மு , கீ.பி என்று காலங்களை மாற்றி வந்த இந்த உலகம் மனித வாழ்வியலை கூட மாற்றி விட்டது.அணியும் ஆடையில் இருந்து அனைத்து பொருட்களும் நவீன மயப்பட்டு விட்ட காரணத்தினால் மனிதனும் நவீனத்துவத்தின் பின்னால் ஓடி செல்கிறான்
இவ்வாறு இருக்க ஏன் நமது பெற்றோரின் கருத்துக்கள் இப்போது நமக்கு பிழையாக தோன்றுகின்றது என்பதை மனோவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறி இருக்கின்றனர். அவர்களின் கருத்து படி பெற்றோரின் பேச்சுக்கள் வலுவிழக்கும் சந்தர்ப்பங்களை பார்க்கலாம்.
கனவுகளின் திணிப்பு
இது ஒரு சுழற்சி முறை சுமை என்று சொல்லலாம். எமது பாட்டன் பாட்டிகளின் கனவுகளும், அவர்கள் எப்படி எல்லாம் ஆக வேண்டும் என்று நினைத்தார்களோ, அது அவர்களின் காலத்தில் வெறும் கனவாகிப்போனதால் அது எமது பெற்றோரின் மேல் திணிக்கப்பட்டு இருக்கும்.உதாரணமாக எமது பாட்டனார் ஒரு கணக்கியலாளராக இருந்து இருந்தால் எமது பெற்றோரை அதே துறையில் விரும்பியும் விரும்பாமலும் உள்ளிழுத்து விட்டு இருப்பார். எமது அம்மா அப்பாவுக்கு இப்போது நாம் காண்பது போல அவர்களின் காலத்தில் அவர்களின் சூழலுக்கு ஏற்ப கனவுகள் இருந்து இருக்கும் . ஆனாலும் அதை எல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி விட்டு எமது பாட்டனாரின் விருப்பத்திற்காக அவர்கள் தம் விரும்பியதை விட்டு கொடுக்க நேர்ந்து இருக்கலாம். அதுவே அடுத்த கட்டமாக அவர்கள் என்னவாக விரும்பி இருப்பார்களோ அந்த கனவு நம் மீது திணிக்கப்படும் இதுவே பெரும்பாலான பிரைச்சினைகளுக்கு அடிப்படை விடயம். எனவே தமது சுய விருப்பு வெறுப்பு என்பன தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அவ்வாறே எமது பெற்றோருக்கு எமது தனிப்பட்ட விருப்பம் இது இன்பத்தை அவர்களுக்கு புரியும் வகையில் தெளிவு படுத்த தவறாக கூடாது .
பெற்றோரின் அறியாமை.
"எனக்கு எல்லாம் தெரியும், நான் உன் அப்பா ", "உன் அப்பா அம்மாவை மீறி என்ன நடக்க போகிறது?", "பெற்றவர்கள் அறியாத விடயம் இருக்கா ?" இவ்வகையான பேச்சசுக்களை ஒரு புறம் தள்ளி வைக்க வேண்டும். இந்த அறிந்த ஒரே ஒருவர , அது நம்மை படைத்த கடவுள் மட்டுமே. அடுத்து நடக்க இருப்பதை அறிந்து கொள்ளும் அறிவு மற்றும் திறன் கடவுளை தவிர யாருக்குமே இல்லை, இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் புதைத்து வைத்துள்ள ஆச்சர்யங்கள் எண்ணில் அடங்காதவை .அவ்வாறு இருக்கும் போது பெற்றோர் சொன்னதை மட்டும் கருத்திற் கொண்டு நாம் நமது சுய மதிப்பீட்டை இழப்போமேயானால் நாம் முதுகெலும்பு இல்லாதவர் என்ற கருத்திக்கொள்ள வேண்டும்
கால இடைவெளி
எமது பெற்றோர் வாழ்ந்த காலத்தில் காணப்பட்ட முறைமைகள் , உணவு பழக்க வழக்கங்கள் எல்லாமே இப்போது நமது காலத்தில் காண கிடைக்காது. அவ்வாறு இருக்கும் போது அவர்களின் மனோ நிலை இந்த கால நடைமுறைகளுக்கு எப்பொழுதுமே முட்டுக்கட்டையாகவே இருக்கும். ஆணும் பெண்ணும் சமமாக இப்போது பழகிக்கொண்டு இருப்போம் ஆனால் அவர்களின் காலத்தில் பெண்கள் ஆண்களை ஏறெடுத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர்களின் காலத்தில் நிகழ்ந்தவற்றை இந்த காலத்துடன் ஒப்பிட்டு நம்மை கட்டாயப்படுத்தும் போது அதுவே எரிச்சலடைய செய்யும் . எனவே பெரும்பாலும் முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு கால இடைவெளிகளில் மாற்றத்தை புரியும்படி செசெய்வது முரண்களில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த வழி ஆகும்
பிள்ளைகள் பெற்றோர் ஆகிவிட முடியாது .
பெற்றோர் சில வேளைகளில் தாம் செய்த அதே வேலைகளை, நடவடிக்கைகளை நாமும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மனதளவிலும் , உடல் வலிமைகளிலும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள மறுதலித்து விடுகின்றனர்.
எம்மை உருவாக்கியவர்கள் பெற்��ோர், ஆகவே அவர்கள் அறியாதது ஒன்றும் இல்லை என்று வரும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளாகிய நாமே சில தனித்துவமான முடிவுகளை எடுக்க வேண்டும் . வயதாலும் , அனுபவத்தாலும் அவர்கள் நம்மை விட முன்னிற்பவர்கள் தாம் . எனவே அவர்களின் அறிவுரைகளும் ஆலோசனைகளும் நமக்கு நன்மை பயக்கும் என்பதில் ஐயம் இல்லை.
ஆயினும் இன்றைய கால இளையவர்கள் நமக்கு சுய மதிப்பீடு, தன் இச்சையாக முடிவெடுக்கும் திறன் என்பன வளர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஆளுமை பண்புகள் ஆகும். இதற்கென எமது பெற்றோரின் அறிவுரைகளை கேட்பது ஒன்றும் தப்பில்லை. என்றாலும் முடிவு எடுக்கும் திறமையை நாம் வளர்த்து கொள்வதன் மூலம் நமது தனித்துவமும் தன்னம்பிக்கையும் உறுதி பெரும் . அதுவே நமது அனைத்து வெற்றிகளுக்கும் வழி வகுக்கும் !