இணைய பாதுகாப்பு தொடர்பில் அவதானம் பெறவேண்டிய நேரமிது 

அதிகரித்துவரும் இணைய தாக்குதல்களை சமாளிப்பது எப்படி ?

எமது வேலைகளை இலகுபடுத்த நமது மூன்றாவது கரமாக விளங்கக்கூடியது கணினியும் இணையத்தளங்களும் ஆகும். இவற்றின் பயன்பாடு இல்லாமல் எம்மால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது எனும் அளவுக்கு நமது அன்றாட வாழ்வியலில் ஒன்றித்து போய் விட்டது. அவ்வாறே எமது அனைத்துவித தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வியலில் முக்கியமான இரகசிய காப்பு கருவியாக, பாதுகாப்பு பொக்கிஷமாக விளங்கக்கூடியது கணினியும் இணையங்களும் ஆகும்.

மனித வாழ்வியலில் முக்கிய இடம்பிடித்திருக்கும் கணினி மற்றும் இணையத்துறை ஒரு நொடி இயங்காது விட்டாலோ அல்லது எமது ரகசியங்கள் களவாடப்படும் அவல நிலை ஏற்பட்டாலோ நாம் ஸ்தம்பிதம் அடைந்து விடுவோம். அவ்வாறே பாரிய நட்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியும் நிலை ஏற்படும்.

கணிப்பீட்டின் படி கடந்த 2017ஆம் ஆண்டில் மிகவும் அதிகபட்சமான அளவு இணைய திருட்டுக்களும், கணினி வைரஸ்களின் தாக்குதல்களும் இடம்பெற்றிருப்பதாக பிரபல கணினி பாதுகாப்பு நிறுவனமான கஸ்பர் ஸ்கை நிறுவன அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இது கடந்த ஆண்டுகளை விட 30 % அதிகமானதாகவும் , அவ்வாறே புதுப்புது வைரஸ்கள் தினம் தினம் அதிகரித்த வண்ணமே இருப்பதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

  • அதிகரித்துவரும் பணம்பறிக்கும் "ரன்சம்வேர்" வைரஸ்கள்.

கடந்த ஆண்டில் கணினி உலகில் அதிகமாக பேசப்பட்ட பெயர்தான் ரன்சம்வேர் வைரஸ். இது பல்வேறு ரூபங்களில் பணப்பறிப்பு யுக்தியை கையாள்வதற்கென உருவாக்கப்பட்ட வைரஸ் ஆகும்.கடந்த வருடத்தில் மட்டும் 150 நாடுகளில் உள்ள 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளை முடக்கியது இந்த ரன்சம்வேர்கள்.

இந்த ரன்சம்வேர்கள் உங்கள் கணினியை முடக்கும் பட்சத்தில் 3 நாட்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு முதலில் மிரட்டல் விடுக்கும். அவ்வாறே நாம் பணம் செலுத்த தவறினால் அடுத்தகட்டமாக செலுத்தவேண்டிய தொகையினை இரட்டிப்பாக மாற்றுவதுடன் எமது ரகசிய கோப்புக்களை முழுவதுமாக அழித்துவிடும் என்ற மிரட்டலை விடுக்கும். பல முன்னணி நிறுவனங்கள் கூட இந்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

பணப்பரிப்புக்கு பெயர்போன இந்த ரன்ஸைம்கள் Wannacry, Bad Rabbit , போன்ற மிகவும் அபாயகரமான வைரஸ்களை கணணிக்குள் உலவவிட்டு பணப்பறிப்பில் ஈடுபட்டன. இது நாளடைவில் கணணியை முற்றிலுமாக செயலிழக்க செய்தும் விடுகின்றதாக அறியப்படுகின்றது.

மறையீட்டு செலாவணி முறையில் (Crypto Currency ) இவர்கள் பெரும்பாலும் பணப்பரிப்பில் ஈடுபடுகின்றனர்.வெளிவந்த ரன்சம்வேர்களில் முக்கிய இடம் வகித்த WANNACRY வைரஸ் பிரபல NHS மற்றும் அது சார்ந்த நிறுவனங்களை ஆக்கிரமித்த அதே நேரம் BAD RABBIT வைரஸானது பொதுவாக ரஷ்யாவின் ஊடகங்கள் மற்றும் அரச நிறுவன கணினிகளை பெருவாரியாக தாக்கியது. அவ்வாறே அவர்களால் முடக்கப்பட்ட கொப்புகை மீள் செயற்படுத்த தலா $280 டாலர்கள் மற்றும் 0.05 பிட்காயினை தண்டப்பணமாக அறவிடவும் செய்ததாக அறியப்படுகின்றது.

  • எலியும் பூனையும் 

அதிகரித்துவரும் இணைய குற்றங்களின் தந்திரோபாயம் என்பது எலியும் பூனையும் போன்றதாக இணைய உலகில் விவரிப்பார். அதாவது இணைய திருடர்களுக்கு பாதுகாப்பு தயாரிப்பாளர்களுக்குமான உறவை இவ்வாறு எலிக்கும் பூனைக்குமான உறவாகவே கருதுவர்.ஒவ்வொரு புதுப்புது குற்றங்கள் அறிமுகமான பின்னர் அதனில் இருந்து எவ்வாறு மீள்வது என்ற போராட்டத்தில் விளைவே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

பார்க்கப்போனால் இணைய உலகில் காணப்படக்கூடிய சிற்சில கவனிப்பாரற்ற கவனயீனங்களே இணையவழி குற்றங்களுக்கான காரணியாக கருதப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வழிமுறைகளில் ஏற்படும் வழுக்கள் இணைய குற்றங்களுக்கான அடித்தளம் ஆகும். ஆக குற்றங்கள் பிறந்தால் ஒழிய ஏற்படும் வழுக்களை திருத்தும் யுக்திகளை நாம் இனம் காணப்போவது இல்லை என்பது உண்மைதானே ?

  • வைரஸ்களின் வளர்முக சந்தை உபாயம் 

மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர் ஸ்கை தமது ஆய்வில் குறிப்பிட்டது படி கடந்த 2017 ஆம் ஆண்டில் 96000 புதிய வைரஸ்கள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. இது கடந்த 2016 ஆண்டை விட இருமடங்காக பெருக்கெடுத்திருப்பதாக அறியப்படுகின்றது.

எல்லாவிதமான வைரஸ்களும் நாளுக்கு நாள் தம்மை மேம்படுத்திக்கொண்டு புதுப்புது சிக்கல்களுடன் பாதுகாப்பு தயாரிப்பாளர்களுக்கு சவால் விடுவது போன்றே வெளிவந்தவண்ணம் உள்ளது. எவ்வாறாயினும் சிக்கல்கள் பிறப்பிக்கப்படும் அதே நேரம் அதற்கான மாற்று உபாயங்களை கண்டறிவதில் இணைய பாத்ததுகாப்பு தயாரிப்பாளர்களும் நிறுவனங்களும் செய்துவருகின்றன.

உண்மையில் உருவாக்கப்படும் வைரஸ்களால் இணைய சந்தையில் நல்ல மாற்றங்களே நிகழ்ந்து வருகின்றன. அதாவது ஒவ்வொரு விதமாக உருவாக்கப்படும் வைரஸ்களின் புத்துருவாக்கமே இணைய உபயோகத்தர்களின் குறை தீர்க்கும் கருவி என்று சொல்லலாம். நாளுக்கு நாள் இணையத்தை மென்மேலும் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொரு வகையான புதிய பிரச்சினைகள் செய்யும் உதவியானது இணைய பாதுகாப்பினை வவலுப்பெற செய்கின்றது .

இணையம் என்பது எமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை பிடித்துவிட்டது. எவ்வாறு மனித தேவைகளும் விருப்பங்களும் நாளுக்கு நாள் தம்மை மேம்படுத்தி கொள்ள தவறுவதில்லையோ அவ்வாறே அதற்கான பிரச்சினைகளும் அதனை தீர்க்கும் உபாயங்களும் தம்மை மேம்படுத்திக்கொண்டே செல்கின்றன. எவ்வாறாயினும் சிக்கல்கள் தோன்றுமிடத்து தான் அதற்கான தீர்வும் உருவாகும் எனினும் பாதுகாப்பினை பலப்படுத்திக்கொள்வது தனிப்பட்டவர்களின் கைகளிலேயே உள்ளது என்பது இணைய செயலிகளுக்கு பொருந்தும்.

 

 

Article By TamilFeed Media, Canada
6063 Visits

Share this article with your friends.

More Suggestions | Technology