வாழைப்பூ

இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை.
- அகத்தியர் குணபாடம்

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இரத்த மூலம்
மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கைகால் எரிச்சல் நீங்க
கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க
வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

தாது விருத்திக்கு
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.

மலட்டுத்தன்மை நீங்க
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

Article By TamilFeed Media, Canada
2778 Visits

Share this article with your friends.

More Suggestions | Health