உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்! 

காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இலங்கை, இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

Article By TamilFeed Media, Canada
2495 Visits

Share this article with your friends.

More Suggestions | Health