வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் ஆபத்துக்கள்.

குறுகிய கால வலிக்கு உடனடி நிவாரணம் பெரும் முயற்சி பேராபத்தை ஏற்படுத்தும்.

பிறந்தது முதல் இறக்கும் வரையில் மனிதனுக்கு ஏற்படக்கூடியதும் நேரடியாக உருவகித்து கூற முடியாததுமான உணர்வு வலி. நமது வாழ்வில் ஏதேனும் ஒரு நொடியாவது வலி என்ற உணர்வினை நாம் உணர்ந்திருப்போம். எந்தவொரு நோயாக இருந்தாலும் அது வெளிப்படுத்தும் முதல் அறிகுறி வலியாகத்தான் இருக்கும். எனவே இவ்வகை வலி நிவாரண மாத்திரைகள் தொடர்பில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

வலிக்கு மாத்திரைகள் அவசியமா? 

உங்களுக்கு ஏற்படும் வலிவை உணரும் போது நீங்கள் கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய விடயம் அந்த வலியின் ஆழம் மற்றும் அதற்க்கு கண்டிப்பாக நிவாரணி வில்லைகள் எடுக்க வேண்டுமா என்பதாகும். உடலில் பல்வேறுவிதமான வலிகள் தோன்றினாலும் அவை தானாகவே மறையக்கூடியதாகவே பெரும்பாலும் இருக்கும். உங்களால் சில நாட்கள் அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியும் எனும்போது, இந்த வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், இத்தகைய வலி நிவாரணி, மாத்திரைகள் உங்களை பரிபூரணமாக குணப்படுத்துவதில்லை, மாறாக ஒரு தற்காலிக நிவாரணத்தையே தருகின்றன. 

மூலகாரணத்தை கண்டறியவும். 

எல்லா வலிகளுக்கும் அடிப்படையாக ஒரு காரணம் இருக்கும். அந்த வலி, எதாவது ஒரு காயம் அல்லது கோளாறினால் உண்டானதாக இருக்கும். மேலும், வலி என்பது ஒரு அறிகுறி தான். ஆகவே, வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறுவதைக் காட்டிலும், சரியான நிபுணரிடம் சென்று, வலிக்கான மூல காரணம் என்ன என்பதை தெரிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதால் வலி நிரந்தரமாக உங்களை விட்டு போகும்.


சரியான நிபுணரை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் எந்த ஒரு வியாதி அல்லது காயத்தால் நீண்ட நாட்கள் வலியால் அவதிபடுபவராக இருந்தால், அந்த குறிப்பிட்ட நோயை குணபடுத்தும் நிபுணரிடம் ஆலோசனை பெற்று, அதற்கான சிகிச்சை முறையை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்கள் வலி நிவாரணியை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக மேலே கூறிய முறை சிறந்தது. பொதுவாக நிபுணர்கள், பல்வேறு கட்ட சிகிச்சைகளுக்கு பின்னர் அந்த வலி முற்றிலும் மறைவதற்கான காலத்தை தெரிவிப்பார். 


சுயமாக சிகிச்சை செய்வதை தவிர்த்திடுங்கள்.

நம்மவர் மத்தியில் உள்ள மிக முக்கிய பிரச்சினையே சுயமாக வலிநிவாரணிகளை உட்கொள்வது, சிகிச்சைகளை மேற்கொள்வது என்பனவாகும்.மருத்துவ பரிந்துரை இல்லாமல் தாமாகவே சுயமாக மருந்துக்கடைகளில் மருத்து மற்றும் வலி நிவாரணிகளை வாங்கி உட்கொள்வதை பலரும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.இது மிகவும் ஆபத்தான பழக்கமாகும். இவ்வகையான பழக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். கட்டுப்படுத்த முடியாத வலி இருக்கும்போது, மருத்துவரிடம் சென்று உங்கள் வலியின் ஆழத்திற்கு ஏற்ற மருந்தை பரிந்துரைக்க செய்து, அதனை உட்கொள்வதே சிறந்தது.

பக்க விளைவுகள் பற்றிய அறிதல் அவசியம்.

மற்ற மருந்து மாத்திரைகளைப் போல், வலி நிவாரணி மருந்துகளுக்கும் பக்க விளைவுகள் கண்டிப்பாக உண்டு. ஆகவே, வலி நிவாரணி மாத்திரைகள் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன் அதன் பக்க விளைவுகளைப் பற்றி முழுதும் தெரிந்து கொள்வது நல்லது. செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் , மயக்கம், சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளால் உண்டாகும் நோய்களாகும். ஆனாலும், சரியான அளவு மருந்தை பிரயோகிக்கும் போது, பக்க விளைவுகள் பெரும்பாலும் பெரிதாக உண்டாவதில்லை. 


வலி நிவாரணிகளுக்கு அடிமையாகும் தன்மை.

வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் மிக அபாயகரமான பக்க விளைவு, மனோரீதியாக இவற்றிற்கு அடிமையாவதாகும். உலகம் முழுவதிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள், இத்தகைய பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இவர்கள் பெரும்பாலும், வலி நிவாரணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். உடனடியாக ஒரு தற்காலிக நிவாரணத்தை தரும் இந்த மருந்துகளின் தன்மை தான் மனிதர்கள் இவற்றிற்கு அடிமையாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், வலி குறைந்த பின்னும் அதனைப் பயன்படுத்துவதை நிறுத்துவதில்லை. 

தவறானப்பாதையில் செல்லல். 

வலி நிவாரணி மருந்துகளுக்கு அடிமையானவர்கள் எளிதில் தவறான ஒரு பாதையை தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இப்படி வலி நிவாரணிக்கு அடிமையாகும் சிலர், கொக்கைன், மது, ஹெராயின் போன்றவற்றை பயன்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. வலி நிவாரணி மருந்துகளில் உள்ள உச்ச நிலையை பொறுத்துக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி இவர்களின் உடலுக்கு இல்லாமல் போவதால் இத்தகைய நிலை உண்டாகிறது.

 உறுப்புகள் சேதமடைதல்.

வலிமையான வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மற்றொரு மோசமான தாக்கம் என்பது, உடல் உறுப்புகள் சேதமடைதல் ஆகும். வலி நிவாரணியில் இருக்கும் சில இரசாயனங்கள், உடலால் உடைத்து வெளியேற்றக்கூடிய அளவை விட கடினமாக இருக்கக்கூடியவை ஆகும். ஆகவே இத்தகைய ரசாயனங்களை உடைக்க, கல்லீரல், இதயம் போன்றவை இன்னும் கடினமாக உழைக்கக் வேண்டியிருக்கிறது. ஆகவே, தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், கல்லீரல், இதயம் போன்றவை வலிமை இழக்கின்றன. இதனால் விரைவாகவே இவை சேதமடைகின்றன. 


மருத்துவ வரலாற்றை அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

 உங்கள் உடலில் உள்ள வலி தொடர்பாக, புதிதாக எதாவது ஒரு மருத்துவரை அல்லது நிபுணரை சந்திக்க சென்று, அவர்கள் உங்களுக்கு வலி நிவாரணி மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு முன், உங்கள் மருத்துவ வரலாற்றை அவர்களுக்கு தெரியப்படுத்து��து மிகவும் முக்கியம். ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் முன்னர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது உங்களுக்கு ஏதாவது ஒன்றில் ஒவ்வாமை இருக்கலாம், மன ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கலாம். இவற்றை பற்றி உங்கள் மருத்துவருக்கு தெரிவிப்பதன் மூலம், அதற்கு ஏற்ற வகையில் வலி நிவாரணிகளை உங்களுக்கு அவர் பரிந்துரை செய்யலாம்.

Article By TamilFeed Media, Canada
14560 Visits

Share this article with your friends.

More Suggestions | Health