போராசிஸ் பிலாப்பெலிபெஸ் என்கிற தாவர பெயரை கொண்டதாக பனை விளங்குகிறது. ஒரு காலத்தில் பதநீர் மிகச் சிறந்த உணவாக அன்றாடம் பருகப்பட்டு வந்தது.
அப்போது குழந்தைகளுக்கு கூட பதநீர் கொடுத்து வந்தனர். இதனால் அன்றைய தலைமுறையினர் வயிற்று வலி, வயிற்று புண், புற்றுநோய் போன்றவை தாக்காத ஒரு தலைமுறையாக இருந்தனர். பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு மிகச் சிறந்த உணவாக அமைகிறது. நுங்குவை கொண்டு வியர்குருவை கட்டுப்படுத்தும் மேற்பூச்சு மருந்தாக பயன்படுகிறது. நுங்குவில் உள்ள பசையை உடலில் பூசி வருவதால் வியர்குருவால் ஏறப்டும் அரிப்பு, சொறி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
அதே போல் பனையின் இள நுங்கை கொண்டு வயிற்று வலி மற்றும் அல்சருக்கான மருந்தை தயார் செய்யலாம். இளம் நுங்கின் பசையை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தயிர் சேர்க்க வேண்டும். இதை அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலம் வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உபாதைகளில் இருந்து விடுபடலாம்.
மேலும் தொடர்ந்து எடுத்து வருவதால் அல்சர் பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். நுங்கில் காணப்படும் மியூசிலேஜ் என்கிற சத்து குடலில் இருக்கும் புண்ணை ஆற்றக் கூடியது. குடலுக்கு பலத்தை தரக் கூடியது. மலத்தை வெளித்தள்ளக் கூடியது. இளநுங்கு வயிற்று வலியை போக்கக் கூடியது. அதே நேரத்தில் முற்றிய நுங்கு வயிற்று வலியை வரச் செய்யக் கூடியதாக உள்ளது. எனவே நாம் உண்ணுகின்ற போது இளநுங்காக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை தணிக்கும் பானம் ஒன்றை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் இள நுங்கு, பனங்கற்கண்டு, ஏலம், நுங்கு பசையுடன் சிறிதளவு ஏலக்காயை பொடி செய்து சேர்க்க வேண்டும். 3 ஸ்பூன் அளவுக்கு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இவற்றுடன் நீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இது வெயிலில் ஏற்படக் கூடிய உஷ்ணத்தை போக்கி, சிறுநீரை பெருக்கக் கூடிய ஒரு மருந்தாக அமைகிறது.