உங்களின் சுயவிபரக்கோவையை  சரியாக அமைப்பதெப்படி 

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்காக அடியெடுத்து வைக்கவிருக்கும் உங்களை பிரதிபலிக்கும் விபரக்கோவையை சரியாக அமைத்துக்கொள்ள சில டிப்ஸ்

ஆணாகட்டும், பெண்ணாகட்டும்,வாழ்க்கையின் முக்கிய கட்டமாக கருதுவது தொழில்துறையினை தேர்வுசெய்யும் காலகட்டமாகும், மனிதனின் வாழ்வியலை பொறுத்த வகையில் அவனது ஒட்டுமொத்த வாழ்கையினையே தேர்தெடுக்கப்போகும் காலகட்டம் தொழில் முறை வாழ்க்கையை குறிப்பிடலாம். இது பலருக்கு முன்னேற்றகரமானதாக அமைவதுடன் ஒரு சிலருக்கு தோல்வி நிலையினை ஏற்படுத்திடவும் செய்யும்.

தொழில்முறை வாழ்கையாகட்டும், கல்விநிலையிலான அடுத்த கட்டமாகட்டும் அது சரியான முறையில் அமைந்து கொள்ள அடித்தளமாக அமைவது எமது தனி விபரங்களை அடக்கிய சுய விபரக்கோவை ஆகும், பொதுவெளியில் பயணிக்கவிருக்கும் நம்மை பற்றி அடுத்தவர் தெரிந்துகொள்ளும் திறவு கோளாக அமைவது எம்மைப்பற்றிய சுயவிபரக்கோவை ஆகும். 

எம்மை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் கண்ணாடி போன்றது எமது சுயவிபரக்கோவை, பலருக்கு இதனை எப்படி சரியாக அமைத்துக்கொள்வது என்பது தொடர்பில் தெரியாமலேயே இருக்கும்.பிறர் நம்மை அறிந்துகொள்ளும் ஊடகமாக இருக்கப்போகும் எம்மைப்பற்றிய சுயவிபரக்கோவையை எளிமையாகவும் வினைத்திறனுடனும் அமைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம். 

 

 1. சரியானதும் தெளிவானதுமான தகவல்களை இணைத்தல் 

உங்களது சுயவிபரக்கோவை தட்டச்சு செய்யும்போது தெளிவானதும், தரமானதுமான எழுத்துரு (FONT) ஒன்றினை தேர்வு செய்யுங்கள்.ஆரம்பம் முதல் இறுதி வரையில் அதே எழுத்துருவை பயன்படுத்துவதை கண்டிப்பாக கொள்க.

விபரக்கோவையில் உட்செலுத்தும் தரவுகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டியது அவசியம்.அவ்வாறே தொடர்பு இலக்கங்கள் மற்றும் உங்களை பரிந்துரைக்கக்கூடிய மூன்றாம் நபர்கள் பற்றிய விபரங்களை(NON RELATED REFEREES) சரியானதாகவும், அவர்களின் அனுமதியுடனும் வழங்கிட வேண்டியது அவசியமே . நீங்கள் கொடுக்கும் தகவல்களே உங்களை பிரதிபலிப்பது என்பதை மறந்திட கூடாது.

 

2. புறநிலை மற்றும் மாற்றீடுகளை தவிர்த்திட வேண்டும். 

சுயவிபரக்கோவையில் புறநிலை(OBJECTIVES) காரணிகளோ, அல்லது மாற்றீடுகளோ உட்செலுத்த கூடாது. துல்லியமானதும் 100 % சதவீதம் சரியானதும் ,உறுதியானதுமான தரவுகளை மட்டுமே விபரக்கோவையில் உள்ளடக்கிட வேண்டும், அவ்வாறே தட்டச்சு பிழைகள், எழுத்து பிழைகள், மாறுதல்கள், மாற்றீடுகள் என்பன விபரக்கோவையில் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் .

3. தக்க வடிவமைப்பை தேர்வு செய்க, 

இப்போது தொழில் தருனர் நிறுவனங்கள் தமது வேலைக்களுக்கான வெற்றிடங்களை குறிப்பிடும்போது சில புற வடிவமைப்புக்களை (FORMATS) தெரிவு செய்தே குறிப்பிடுவது காணக்கூடியதாக உள்ளது. அதாவது அவர்களுக்கான பிரத்தியேக வடிவமைப்பு முறையினை சில நிறுவனங்கள் பராமரித்து வருகின்றன.எமது அந்தரங்க தகவல்களை வழங்கும் பொது அது பாதுகாப்பாகவும் , பிறரால் களவாடிட முடியாததாகவும், இலகுவில் கோவைப்படுத்தக்கூடியதாகவும் உள்ள கட்டமைப்புக்களையே அவை விரும்பும் எனவே அந்தந்த நிறுவனங்களை தொடர்புகொள்ளும் பொது, அவர்கள் விரும்பிய , அவர்கள் நிறுவனத்திற்கு ஏற்புடைய வடிவமைப்பினை மையமாகக்கொண்டு எமது சுயவிபரக்கோவையை வடிவமைத்துக்கொள்ளுவது சாலச்சிறந்ததாகும்.

4. உங்களின் பெயரின் கீழ் விபரக்கோவை அமைவது சிறந்தது.

உங்களை பற்றிய விபரத்தினை சொல்லும் விபரக்கோவைக்கு உங்களின் பெயரினை தலைப்பிட்டு மறந்திட வேண்டாம், ஏதேனும் ஒரு மூலையில் உங்களின் பெயர் சிறிய இடத்தில் குறிப்பிடப்படுமானால் பார்ப்பவர்களுக்கு பெரும் குழப்பத்தினை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. பெயரை முற்கூட்டியே நாம் குறிப்பிட்டு தெரியப்படுத்தும் போது நம்மை பற்றிய கவனம் சீராகவே கொண்டுசெல்லப்படும். 

அத்துடன் தொடர்பு முகவரி மற்றும் இலக்கங்கள் என்பன நிரந்தரமாக இல்லாதவிடத்து அவற்றை சேர்த்திடுவதை தவிர்க்கவும்,உடனடியாக தொடர்புகொள்வதற்கான தற்காலிக வதிவிட முகவரி மற்றும் தொடர்பு இலக்கங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை தற்காலிகமானது என்ற சொற்பதத்துடன் குறிப்பிட மறக்க வேண்டாம் 

5. மீத்தொடுப்பு (HYPERLINKS) இணைப்பதா ? வேண்டாமா? 

இப்போதெல்லாம் சில முன்னணி நிறுவனங்கள் சுயவிபரக்கோவையை மென்பிரதிகளாக (SOFT COPY) எதிர்பார்க்கின்றனர்,விபரங்களை கணினிமயப்படுத்துவதையும் அதன் மூலம் இலகுவாக தரவுகளை பாதுகாத்து சீரமைத்து வைத்துக்கொள்ளுவதையும் விரும்பும் சில முன்னணி நிறுவனங்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்பது மின்னியலமைப்புடனான மென்பிரதி சுயவிபரக்கோவைகளை ஆகும். அச்சிடப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கும் அளவுக்கு யாரும் விரும்புவதும் இல்லை.

இவ்வாறு மின்னியல் படுத்தப்பட்ட சுயவிபரக்கோவையின் இன்னுமொரு விடயம் தான் மீத்தொடுப்புக்களை இணைப்பது.இதனை சில பிரபல நிறுவனங்கள் வரவேற்கின்றன.அதாவது உங்களை பற்றிய விடயங்களை அல்லது நீங்கள் பிற மின்னியல் படுத்தல் விபரங்களை சுருக்கமாக தொடர்புகொள்ள செய்வதில் மீத்தொடுப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் எமது சுயவிபரங்களை கொண்ட சமூக வலையமைப்புகள் பற்றியும், எமது சொந்த ஆக்கங்களை கொண்ட ஏதேனும் இணையத்துவ வலைத்தளங்கள் காணப்படுமிடத்து அவற்றை எமது சுயவிபரக்கோவையில் சேர்த்துக்கொள்வது நல்லது. எம்மைப்பற்றிய மேலதிக தகவல்களை விளைதிறனுடன் விபரிக்க செய்வதில் இந்த மீதொடுப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. உதாரணமாக LinkedIn, FACEBOOK , BLOGGER, INSTAGRAM என்பனவற்றில் காணப்படும் உங்களுக்கான பிரத்தியேக பக்கங்களுக்கான தொடுப்புக்களை இணைப்பது நல்லது.

6. எது முக்கியம்? எது முக்கியமில்���ை ? 

பிறந்த திகதியை விபரக்கோவையில் இணைப்பது தவறில்லை, ஆயினும், திருமண ஆண்டு,திருமண நிலை, மதங்கள்,போன்றவற்றை உள்ளகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.நாங்கள் என்ன படித்தோம் என்பது முக்கியமே தவிர படித்த ஆண்டு,பாடங்கள், மற்றும் ஆரம்ப பாடசாலைகளின் பெயர்கள் என்பன முக்கியம் வாய்ந்ததில்லை. ஆயினும் ஒரு சில நிறுவனங்கள் நாம்படித்த பாடசாலைகளின் பெயர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது பிரபலமான பாடசாலையின் மாணவர், மாணவ தலைவர்கள், விளையாட்டு மற்றும் பல்திறமை கொண்டவர் என்ற ரீதியில் கண்டிப்பாக அவற்றை கருத்திற் கொள்வர் 

இதற்கு முன்னர் தொழில் புரிந்த இடம், செய்த தொழில் பற்றிய விபரங்களை குறிப்பிடும் தொழிற் தகைமைகளை முதலில் இடம்பெற செய்து பின்னர் உங்கள் கல்வித்தகமைகளை இடம்பெற செய்வதே சரியான அணுகுமுறை ஆகும் .

7. பக்கங்களை அதிகரிக்க வேண்டாம், 

என்னதான் நமது தகைமைகள், திறமைகள், மற்றும் கூடுதல் திறமைகள் அதிகபட்சமாக இருப்பினும் அவற்றை பந்தி பந்தியாக பல பக்கங்களை சுமந்து வரும் அளவுக்கு நீட்டிக்கொண்டு செல்வதை தவிர்ப்பது நல்லது.பொதுவாக விபரக்கோவையை இரண்டுபக்கங்களுக்கு அதிகமாகாதவாறு தயார்படுத்திக்கொள்வது நல்லது. அவ்வாறே நமது விபரங்களை சரியான வகையில் குறிப்பிடவும் வேண்டும், 

பள்ளிப்படிப்பு குறித்த விபரங்களை அதிகமாக குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை , மாறாக எமது திறமைகள் மற்றும் பிற தகைமைகளை அவ்வப்போது கோவைக்குள் மேம்படுத்தி இணைத்துக்கொள்ள தவறிட கூடாது. 

8. தரவுகளை சீராக வழங்கிட வேண்டும் 

அதிகளவிலான திறமைகளை கொண்டவராயின் அவற்றை சீராக வகைப்படுத்திட வேண்டும் .அவ்வாறே ஆரம்பத்தில் குறிபிட்டது போல ஒரே சீரான ,ஒரே மாதிரியான எழுத்துரு,புற வடிவமைப்பு என்பனவற்றை கருத்திற்கொள்ளும் அதே நேரம் மிகவும் சுருக்கமான வடிவுருவில் எழுதுவதையும், வித்தியாசமான மற்றும் பல நிறங்களைக்கொண்டதுமான அமைப்புக்களை கோவைக்குள் பயன்படுத்துவதையும் தவிர்த்துக்கொள்ளுவது சிறந்தது.

அவ்வாறே கடந்தகால தொழில் அனுபவங்களை ஆண்டுகளுடன் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. வேலைகளுக்கான இடைவெளிகளை ஆண்டுகள் கொண்டு நிரப்புவது சிறந்த யுக்தி ஆகும். 

9. மிகவும் எளிமை கூடாது

மேம்படுத்தப்பட்ட மொழிநடை அவசியம். உங்களை பற்றிய சுருக்கத்தில் மிகவும் எளிய முறையில் குறிப்பிட வேண்டாம், வித்தியாசமாகவும், தனித்த்துவமாகவும் உங்களை பற்றி குறிப்பிடுங்கள். கிடைக்கப்பட்ட பதவி உயர்வுகள், மற்றும் மாற்றல்கள் என்பனவற்றை தெளிவாக குறிப்பிடுங்கள் .இறுதி பத்து ஆண்டுகளுக்குள்ளானதான அனுபவங்களை உள்ளடக்குவதே சிறந்த முறை ஆகும். 

10. எண்கள் மற்றும் குறியீடுகள் 

எண்கள் மாற்று குறியீடுளை பொருத்தமான இடத்தில் மட்டும் குறிப்பிடுவது நல்லது. அவ்வாறே இணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய சொற்களை (KEYWORDS) இணைத்துக்கொள்வது நல்லது 

 

இவை தவிர்த்து எமது சுய விபரக்கோவையை தயாரித்து முடித்த பின்னர் யாரிடமாவது கொடுத்து சரிபார்த்துக்கொள்வது நல்லது. அதி முக்கியமாக சிறந்த வார்புருக்களை (TEMPLATE) கொண்டு உங்களது சுய விபரக்கோவையை தயார் செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது.

Article By TamilFeed Media, Canada
12239 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle