அதிகநாட்கள் ஆரோக்கியமாக வாழ இவற்றை செய்துபாருங்கள்

ஜப்பானியர்களும் கடை பிடிக்கும் பழக்க வழக்கம் இவைதான்

அதிக நாட்கள் உயிர் வாழும் ஆசை யாருக்கு தான் இல்லை, நோயற்ற வாழ்வை வாழவேண்டுமென்பதே எல்லோரினதும் பேராசை ஆகும், ஆனால் இந்த காலத்தில் இளம் பிராயத்தினருக்கு கூட பல்வேறுபட்ட உடல் உபாதைகளும் நோய்களும் ஆட்டிப்படைத்துவிடுகின்றது.ஆரோக்கியமான மனிதர்கள் என்ற சொற்பதம் கூட வழக்கொழிந்துவிடும் நிலையில் இன்றைய உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

எமது உணவு பழக்க வழக்கங்களும் நாம் கடைபிடிக்க தவறிய பாரம்பரிய முறைகளும் பல்வேறு பெயரில்லா நோய்களுக்கான காரணிகளாக அமைந்துவிடுகிறது. மாறிவரும் சமூகவியலுக்கேற்ப மட்டுமல்லாது மேலைத்தேய மோகத்தில் பல மாறுதல்களை நாம் செய்து வந்திருக்கின்றோம் . இதனால் நாம் பரிசாக பெற்றுக்கொண்டது என்னவோ நாட்பட்ட நோய்களும் , உடல் உபாதைகளும் மட்டுமே.

உலகளாவிய ரீதியில் பார்க்கப்போனால் தற்போதைய நிலைமையில் ஜப்பானிய நாட்டு மக்களே அதிக நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழ்வதாக ஆய்வு தகவல்கள் அறியத்தந்துள்ளன. அந்த வகையில் ஜப்பானியர்கள் கடைப்பிடிக்கும் சில உணவு பழக்க வழக்கங்கள் அவர்களது நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமாகும். 

ஜப்பானியர்களை பொறுத்தவகையில், மாரடைப்பு, சர்க்கரை நோய் என்பனவற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். மிகவும் குறுகிய காலத்திலேயே உலகின் முன்னணி நாடாக விளங்கிட இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே மக்களின் மகிழ்ச்சிக்கரமான வாழ்வியலுக்கான உணவு வகைகளின் ரகசியத்தினை பாப்போம் 

  • சோயா அவரை 

ஜப்பானில் சோயா அவரை மிகவும் பிரபலம். அவர்களது தினசரி காலை உணவிலேயே சோயா சேர்த்துக் கொண்டிருப்பார்கள். இது உடலின் ஆற்றலை அதிகரிக்கச்செய்வதுடன் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவிடும். இது உங்களது ஹார்மோன் அளவு,மெட்டாபாலிக் அளவு மற்றும் உடல் எடை குறைக்க பயன்படுகிறது

  • ஓயாட்சூ சிற்றுண்டி 

 ஜப்பான் மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உணவருந்த தவறுவதில்லை. இவர்கள் அதிகபட்சமாக ஓயாட்சூ எனப்படுகிற மதிய சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள்.இவை எண்ணெயில் பொரித்ததோ அல்லது அதிக கொழுப்பு சத்தும் காபோஹைதரேற்று நிறைந்ததோ இல்லை. இவர்களின் ஓயாட்சூவில் ஒருவகையானது வெண்ணெய்ப்பழம், (AVOCADO) மற்றும் ஓட்ஸ் கலந்து உருண்டைகளாக தயாரிப்பது ஆகும். பொதுவாக தானிய வகைகளே இந்த ஓயாட்சூ சிற்றுண்டி வகைகள் கொண்டிருக்கும்.

  • மீன் உணவுகள் 

ஜப்பானியர்களின் உணவில் கண்டிப்பாக மீன் உணவுகள் அதிகமாகும், இதற்கு மீன் உணவுகள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதுவும் ஒரு காரணியாகும்.மீன் உணவுகளை அதிகம் கொள்வனவு செய்யும் நாடுகளில் ஜப்பான் முன்னிலை வகிக்கின்றது. மீன் உணவுகளில் அதிக புரதச்சத்து காணப்படுகின்றது.மீன் எண்ணெய் உடல் வலிமை பெறவும் என்புகளின் ஸ்திரத்தன்மைக்கும் அத்தியாவசியமானது . 

  • அளவான உணவு 

பசித்தாலும்,சாதாரண நாட்களிலும் நாம் உணவருந்தும் போது செய்யும் மிக முக்கியமான தவறு வயிறு நிரம்பும் அளவு உணவுகளை உட்கொள்வதாகும். ஒரு வேளை உணவு என்றாலும் அதில் 80 % சதவீதம் தான் உட்கொள்ள வேண்டும்

  • உட்காரும் எண்ணம் இருத்தல் ஆகாது. 

நேர முகாமைத்துவம்செய்து உணவருந்தினாலும் , ஓரிடத்தில் அமர்ந்து அதிகநேரம் செலவிட ஜப்பானியர்கள் விரும்புவதில்லை,அவ்வாறே அருகிலுள்ள இடங்களுக்கு என்றாலும் வாகனத்தில் செல்வதை தவிர்த்து நடந்தே செல்கின்றனர்.அதிக நடையும் இவர்களின் ஆரோக்கியத்திற்கான ரகசிய யுக்தி ஆகும்.

  • புளித்த உணவுகள்

ஜப்பானியர்கள் பெரும்பாலும் புளிக்க வைத்த உணவுகளில் (FERMENTED FOODS) அதிக நாட்டம் கொண்டுள்ளனர், தயிர், வெண்ணெய், ஊறுகாய் போன்ற புளிக்க வைத்த உணவுகள் இலகுவில் செரிமானம் அடைந்தது விடுகின்றமையே இதற்கான காரணம் . அத்துடன் அவை சத்துக்கள் நிறைந்தவையாகும். 

  • சூப் வகைகள் 

தினசரி உணவில் ஏதேனும் ஒரு சூப் வகை கண்டிப்பாக இருக்கும் , ஆயினும் அவை கிரீம் சார்ந்தவையாக அல்ல. உணவுக்கு முன்னர் சூப் அருந்துவதால் வயிறு நிறைகின்றது. எனவே உணவு உண்ணும் அளவும் குறைவாகவே இருக்கும்.இது தேக ஆரோக்கியத்தை நிலையாக வைத்திருக்க உதவிடும்.

  • ராமென்

ஜப்பானியர்கள் அரிசி சாதத்தினை அதிகம் உட்கொள்வார்கள். இது நாம் உட்கொள்ளும் சாதம் போல் இருக்காது, ஜப்பானிய ராமென் இல் அதிகபட்சமாக சத்துமிக்க காய்கறிகள் இடம்பெறும்.மேலும் சூப் போலவும் ராமென்களை இவர்கள் உட்கொள்வர். இதனால் அதிகபட்ச புரதசத்து இவர்களுக்கு கிடைக்க தவறுவதில்லை 

  • உணவிலும் பாகப்பிரிவினை 

ஒரே நேரத்தில் குழம்பு,சாம்பார்,ரசம்,தயிர் என தொடர்ந்து விதவிதமாக வயிறு முட்ட ஒரு நாளும் அவர்கள் சாப்பிடுவதில்லை. எந்த வேளை உணவாக இருந்தாலும் , அது எவ்வளவு பிடித்தமான உணவாக இருந்தாலும் அவற்றை பாகங்களாக பிரித்து அளவுடன் உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் ஜப்பானியர்கள். 

  • இரவில் கட்டுப்பாடான உணவு 

காலை உணவு அரசனை போலவும், இரவு சிற்றுண்டி வறியவன் போலவும் உட்கொள்ள வேண்டும் என நம் முன்னோர் கூறியது வெறும் பழமொழிக்கானது அல்ல . இரவில் ஜீரணசக்தி உடலில் குறைவாகவே இருக்கும். மாறாக அதிக வலுவான உணவை உட்கொண்டால் அல்லது அதிக அளவிலான உணவுகளை உட்கொள்ளும் போது உணவு ஜீரணத்தன்மை அடைய காலம் எடுப்பதுடன் உறக்கமும் கெட்டு போகும் நிலை ஏற்படும்.

  • பச்சை காய்கறி சாலட்டுகள் 

ஒரு வேளை உணவில் ஜப்பான் மக்கள் நான்கு முதல் ஐந்து வகையான காய் கறிகளை சேர்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை சாலெட்டுகளாக உட்கொள்ளப்படுகிறது. பச்சை காய்கறி வகைகளை அதிகளவில் தமது அன்றாட உணவுகளில் எடுக்க ஜப்பானியர்கள் தவறுவதில்லை . சாலட் செய்யும் போது சுவையூட்டுவதற்காக வறுத்து காய்கறிகளை சேர்ப்பது,எலுமிச்சை சாறு,மாயோனிஸ் ஆகியவற்றை சேர்ப்பது ஆகியவற்றால் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் போகலாம்.எனவே கூடிய அளவு வெறும் பச்சை காய்கறிகளுடனான , மேலதிக கலவைகள் சேர்க்கப்படாத சாலட்களே உண்ணுவதற்கு உகந்தது ஆகும் 


பார்க்கப்போனால் ஜப்பானியர்கள் கடைபிடிப்பது என்னவோ நமது பாரம்பரியம் மிக்க உணவு பழக்க வழக்கங்கள் தான். மேலைத்தேய கலாச்சாரம் ஊறிப்போன நமது சமூகத்தில் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு மாறாக அழிவுப் பாதையை நோக்கியே நம்மை இட்டு செல்கின்றது.எனவே நாம் மறந்து போன, நம்மத்தியில் இருந்து மறைந்து போன இவ்வகை உணவு பழக்க வழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க முயற்சித்தோமானால் நமது ஆயுளின் நீளம் அதிகரிக்கவும் நோயற்ற வாழ்வினை வாழவும் முடியும். 

Article By TamilFeed Media, Canada
2880 Visits

Share this article with your friends.

More Suggestions | Health