அலுவலகங்களில் நிலவும் மன அழுத்த விடயங்களை தவிர்ப்பது எப்படி 

அலுவலகங்களில் நிலவும் மன அழுத்த விடயங்களை தவிர்ப்பது எப்படி 

சிற்சில காரணிகளுக்காக நாம் பலரிடம் எமது கோபத்தை வெளிக்காட்டவும் இதனால் பலரிடம் எமது உறவுகளை தொடர முடியாமலும் போவதை அண்மைக்காலமாக எல்லோராலும் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பினை எதிர்கொள்வதால் நமது முழு வாழ்க்கையும் அத்துடன் முடிந்து விட்டது என எண்ணி சோர்ந்து விடுவதுடன் அதன் தாக்கத்தினை அடுத்தவர் மீது திணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளோம்.

இவற்றிற்கான அடிப்படை காரணம் யாதென ஆராயுமிடத்து முதலில் வரும் பதில் வேலைப்பழு அல்லது வேலைகளில் ஏற்படும் சுமை தாக்கம் என்றே நூற்றுக்கு 90% சதவீதமானோரின் பதிலாக அமையும். 

வேலைகள் எனும்பட்சத்தில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பேரளவிலான மன பாதிப்பினை ஏற்படுத்தும். முடிந்தளவு நாம் எந்தவொரு பிழையும் விடாமல் தான் நாம் நமது வேலையை செய்து முடிக்கப்பார்ப்போம். ஆனாலும் நம்மை அறியாது நிகழும் சிறு பிழை கூட விஸ்வரூபமாக மாறி நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி விடும்.

அலுவலக பணி நிறைவின் பின் வீட்டுக்கு வரும்போது அங்கு அதைவிட பெரியளவிலான மன அழுத்தத்தினை எதிர்கொள்ள நேரிடும். நாம் உழைப்பது நமது குடும்பத்த்திற்காகவே, அனால் அதனை புரிந்து கொள்ளாமல் மேலும் நமது மனங்களை புண்படுத்துவதாக வீட்டில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் அமையும் என்பது பலரின் ஏகோபித்த புலம்பல்களாக இருக்கும் .

இதன் காரணமாக எமது பணியில் தொய்வு நிலை ஏற்பட்டு அலுவலகத்தில் நமது நற்பெயர் பாதிப்படைந்து, தனிமை நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இவை அனைத்திற்கும் மேலாக அடிக்கடி உடல் நிலையம் பாதிப்படைந்து நம்மை வாட்டி வதைக்க தொடங்கி விடுகின்றது,

ஏன் இந்த மனப்போராட்ட நிலை? 

பெரும்பாலும் அலுவலகங்களிலும், தொழில் நிலைகளிலும் நமக்கு ஏற்படும் அனைத்துவித பிரச்சினைக்குமான அடிப்படை காரணமே இலக்கு. அந்த இலக்கு நிலையை அடைவதற்கு இடம்பெறும் போராட்டமும், அது எட்டப்பட்டால் கிடைக்கும் மன ஆறுதலும், தவறினால் கிடைக்கும் வேதனையும் இதற்கான மூல காரணியாகும். 

எந்தவொரு விடயமும் அதன் இலக்கை நோக்கியே சென்றால் தவிர வெற்றி என்பது கிடைக்காது. எனவே நாம் நிர்ணயிக்கும் எல்லை இலக்கானது நமது வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். இதன் மூலமாகவே நமது மன அழுத்தம், தொய்வுநிலை என்பனவெல்லாம் நிர்ணயிக்கப்படும் என்பதை மறந்திட கூடாது.

 எப்படி இதனை தவிர்ப்பது?

நாம் பிறந்த உடனேயே பேசவும், நடக்கவும் செய்கின்றோமா? அல்லது சிந்தித்து செயல்படும் திறமை நமக்கு வந்து விடுகின்றதா?, இல்லை. மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சியும் படிப்படியாக பல தோல்வி நிலைகளை கடந்தே முன்னோக்கி வருகின்றது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தையின் குறிக்கோள் என்பது வெறும் உணவுக்கானது மட்டுமே. அதனை பெற்றுக்கொள்வதற்காக அழுத்தும், பல சேஷ்டைகள் செய்தும் தமது பசி உணர்வினை வெளிக்காட்டி தமது தேவையை பூர்த்தி செய்கின்றது. அவ்வாறே, அந்த குழந்தை வளர வளர, அதன் தேவைகளும், முயற்சிகளும் படிப்படியாக வளர்ச்சிக்கண்டே செல்கின்றது. காலப்போக்கில் அதன் தேவை, இலக்கு என்பன நாளுக்கு நாள் வேறுபடுவதை அறியக்கூடியதானது.

இவ்வாறு மனிதனின் அடிப்படை விடயங்களை போன்றதுதான் வேலையும். ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்படும் இலக்கு நிலை அல்ல பின்னர் நம் காண்பது. நாளுக்கு நாள் அதன் வளர்ச்சியே நமது வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாறி வருகின்றது என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறே இலக்கு என்பது மாற்றம் காணும் எனும் பட்சத்தில் அதனை மட்டுமே முழு வாழ்க்கையாக எண்ணிவிடவும் கூடாது. இதனை தவிர்த்து நம் பிழைகளில் கற்றலும், சரியான விடயங்களை செய்யும்போது அனுபவமும் கிடைக்கின்றது என்பதை எண்ணிக்கொள்வது அவசியம்.

தன்னம்பிக்கையை வளர்த்திடுக.

எல்லா விடயங்களுக்கும் முதல் அடித்தளம் நம் மீதான நம்பிக்கை ஆகும். நாம் செய்யப்போகும் விடயம் எதுவானாலும் அதை சரியாக எம்மால் செய்துமுடிக்க முடியும் என்ற நம்பிக்கையை நாம் முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது எந்தவொருவிடயத்தையும் ஆரம்பிக்கும் முன்னர் அதில் தோற்றுவிடுவோமா என்ற பயம் தான் நமது எல்லா முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகிறது .

அவ்வாறில்லாமல் சூழ்நிலைகளின் போக்கில் நாம்செல்ல ஆரம்பித்தால், எமது தனித்திறமையும், செயலாற்றலும் மங்கி விடுவதுடன், எமது குறித்த இலக்கை அடையமுடியாத நிலை ஏற்பட்டு விடும். இவை அனைத்திற்கும் மேலாக, தன்னம்பிக்கையற்ற நமது செயல்களின்மூலம், மற்றவர்கள் நம்மை குறைத்து மதிப்பிடும் நிலை உண்டாகும். நாம் ஒருவிஷயத்தை மனதில்கொண்டால், அதுவே நம்மை இயக்கி, சூழ்நிலைகளில் சிக்காமல், கொண்ட பாதையில் சென்று, நம் செயலாற்றலை, எல்லோருக்கும் உணர்த்தமுடியும். 

தன்னம்பிக்கை என்பது ஒருநாளில் உருவெடுப்பது அல்ல, படிப்படியான பயிற்சிகளின் மூலம், செயல்களில், சிந்தனையில், எண்ணங்களில் நேர்மறையை கடைபிடித்தோமானால் நமக்கு நம்மீதான நம்பிக்கை வளர்ச்சி பெறுவதுடன் செயற்றிறனான வெளியீடுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லனவற்றை சிந்தியுங்கள்.

எந்தவொரு இலக்கையும் அடைந்துகொள்வதற்காக நாம் எதிர்கொள்ளவிருக்கும் ஏதேனும் ஒரு போட்டி அல்லது தேர்விலும் நாம் முதலிடத்தை பெறவே விரும்புவது வழக்கம். அதற்காகவே நம் நமது கடுமையான உழைப்பினை பிரயோகி��்போம். அவ்வாறு நமது அயராத உழைப்பினை மேற்கொள்ளும்போது நமக்கு வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உருவாகின்றது.
மாறாக நமது எதிராளி யாரென அறிந்துகொள்ளவும் நாம் விரும்புகின்றோம் . அவ்வாறு அறிந்துகொள்ளும் பட்சத்தில் அவரை எவ்வாறு வெற்றிகாண்பது என்பது தொடர்பில் சிந்திக்க தவறுவதில்லை. இவ்வாறு எதிராளியை எவ்வாறு தோற்கடிப்பது என்று நாம் எதிர்மறையாக சிந்தித்தோமானால் அந்த எண்ண ஓட்டமே நம்மையும் வீழ்த்திவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறுகிய மனநிலையானது நம்மை நிலைகுலைய வைத்துவிடும். நாம் கொண்ட எண்ணத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் வெற்றியின் இலக்கினை அடைந்திட முடியும்.

விடாமுயற்சியுடன் பொறுமையாக, நல்லெண்ணங்கள், நற்சிந்தனை, இலக்குகளில் தீவிரம்கொண்டு செயல்பட்டுவந்தால், நம் சுயமதிப்பீடு உயர்ந்து, நம்மை நிரூபிக்க புதிய சந்தர்ப்பம் தேடிவரும். நம் நேர்மறை எண்ணங்கள், புத்துணர்ச்சி மற்றும் செயல்களில் தெளிவு போன்றவை கண்டு, சகஊழியர்கள் மட்டுமன்றி மேலதிகாரிகளும் நட்புபாராட்டுவார்கள். 

எண்ணங்களுக்கேற்ப வண்ணங்களை மாற்றுங்கள்.

இது பாடல்வரி மட்டுமல்ல யதார்த்தத்தின் உண்மை ஆகும். நமது மன நிலையில் மாற்றங்கள் சரியான முறையில் ஏற்பட்டுவிட்டதா என்பதைக்காட்டும் கண்ணாடிதான், வண்ணங்கள். நமது எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்தவல்லவை வண்ணங்கள் என்கின்றனர் உளவியலாளர்கள். அதன்படி ஒவ்வொரு வண்ணங்களும் அதன் குணவியல்புக்கு ஏற்ப நமது எண்ணங்களை மாற்றமடைய செய்யும்.

  • நாம் பச்சைநிறத்தை அதிகம் உபயோகிக்க ஆரம்பித்தால், நம் மனம் அமைதியாகவும், இலக்கை நோக்கியே பயணிக்கிறோம் என்றும் பொருள். மேலும் புத்துணர்வைத் தூண்டும் அருமையான வண்ணம் பச்சை ஆகும் , பச்சை என்பது பசுமையை குறிப்பது.எனவே பச்சை நிறத்தினை நாம் காணும் இடங்களில் வைத்தோமானால் புத்துணர்ச்சி எண்ணமானது நமக்கு ஏற்படும் என உளவியல் ஆய்வாளர்கள் அறியத்தந்துள்ளனர். 
  • நீல வண்ணமும் மனதிற்கு ஏற்றதே, நீலம்தான், எண்ணங்களின் தன்மையை சரியாக்கி, சிந்தனையை ஒருங்கிணைத்து, செயல்களில் தெளிவை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றன. 
  • இலக்கை நோக்கிய விரைவான செயற்பாட்டிற்கு, சிவப்பு வண்ணம் உறுதுணை புரியும், உத்வேகத்தை அதிகரிக்கும். 
  • இவ்வாறே மஞ்சள் வண்ணமும் மனஉறுதியை, நேர்மையான உணர்வுகளை அதிகரிக்கவல்லது. நற்சிந்தனைகளை, செயலாக்கம் பெறவைக்கிறது. 
  • எவ்வாறாயினும், பழுப்பு மற்றும் சாம்பல் வண்ணங்கள் நம்மை அதிகம் கவர்ந்தால், நாம் இலக்கைவிட்டு, வேறுதிசையில் பயணிக்கிறோம் என்றுபுரிந்து, தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.


 கண்டிப்பாக பின்பற்றவேண்டியவை இவைதான். 

நம்மில் பலர் அடுத்தவரைப்பற்றி மட்டுமே எந்தநேரமும் சிந்தித்த வண்ணம் இருப்பதுடன் அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தினை தேடி அறிந்துகொள்வதில் அதீத அக்கறை காட்டி வருவதை இனம்காணகூடியதாக உள்ளது. இவ்வகையானவர்களிடமிருந்து நாம் விலகிக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்.

பயனற்ற பேச்சுக்களால் நமது செயலாற்றல் ஆனது ஸ்தம்பித்துபோகும் நிலையினை அடைந்திட வாய்ப்புக்கள் உள்ளது. உறவுகளிடம் நமது விடயங்களை பகிர்ந்துகொள்வது நமது மனபாரத்தினை இலகுபடுத்தும் ஒரு செயல்தான் என்றாலும் இதன் மூலம் கிடைக்க கூடிய தீர்வு என்பது இரண்டாம் பட்சமானதுவே,

தனிமையில் இருப்பது நமது மன அழுத்தத்தினை அதிகரிக்க செய்வதுதான். ஆனாலும் வீண் அரட்டையை அடிக்கும் நபர்களிடமிருந்து நாம் விலக்கிக்கொள்ள நினைப்பது நமது மன அமைதிக்கே மிகவும் நல்லது

நமக்கு நாமே நீதிபதி!.

நம்மை பாதிக்கும் விடயங்களானவை எவ்வாறாயினும் நமது அனுமதி இல்லாமல் நம்மை நோக்கி வருவது இல்லை. அதன் தாக்கமும் நாம் எவ்வாறு நடந்துகொள்கின்றோமோ அதன் படியே நம்மை தாக்கும். நல்ல எண்ணங்களை நாமே வளர்த்துக்கொள்வது, தன்னம்பிக்கையை மேம்படுத்துவது போன்ற நல்லவிடயங்களே நமது இலக்கு நோக்கிய வெற்றிக்கு அடித்தளம் என்பது ஆணித்தரமான உண்மை ஆகும். அப்படியென்றால் மனஅழுத்தம் நம்மைக்கண்டு தூர விலகி ஓடும்.

Article By TamilFeed Media, Canada
1800 Visits

Share this article with your friends.

More Suggestions | Lifestyle