அழிக்கப்பட்ட உயிர்கள் மீண்டும் உயிர்பெற்றால்

அழிக்கப்பட்ட உயிர்கள் மீண்டும் உயிர்பெற்றால்

ஒரு உயிர் வாழ்வதற்கு இன்னுமொரு உயிரை காவு கொள்ள செய்யும் ஒரு மோசமான சூழ்நிலையில் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் .மனிதனுக்கு ஆறறிவு உண்டு விலங்குகளுக்கு அது இல்லை என்று வியாக்கியானம் பேசும் எவரும் அவ்வகை நம் மனித இனத்தை விட அறிவில் குறைந்ததாக விலங்குகளை கொல்ல தயங்குவதில்லை.

உணவு,சம்பாத்தியம் என பல்வேறு காரணிகளை காட்டி நாம் அழைத்துவரும் விலங்கினங்கள் தொடர்பில் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.மனித இனத்தின் நடவடிக்கையால், இயற்கை மாற்றங்களாலும் பலநூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறப்படும் பல்வேறு ஜீவராசிகள் இப்போது இல்லாமலேயே போயுள்ளது வருந்தத்தக்க விடயமாகும். அவ்வாறே இப்படிப்பட்ட ஜீவன்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து உள்ளது என எண்ணி பெருமை கொள்ளும் அளவுக்கு பல உயிர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இருப்பதனை கண்கூட காண்கின்றோம் .


தெரிந்தோ தெரியாமலோ விலங்குகளின் வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பது ஆகியவற்றால் ஒர் இனமே அழிந்து போகிறது என்றால் சாதரண விஷயம் கிடையாது. இப்போதிருக்கும் பல உயிரினங்களும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ எவ்வளவு உரிமையிருக்கிறதோ அதேயளவு ஒவ்வொரு விலங்குகளுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். இப்போது வளர்ந்திருக்கும் அறிவியல் மற்றும் மருத்துவத்தை பயன்படுத்தி, இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிந்து போன உயிரினங்களை உருவாக்க, மீண்டும் அவற்றை கொண்டு வர அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

உயிரியல் விற்பன்னர்கள் மற்றும் தொல்லியல் நிபுணர்கள் சிலர் இவ்வாறு இழைக்கப்பட்ட விலங்குகளின் எச்சங்களைக்கொண்டு பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.,அந்தவகையில் உயிரியல் ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ஸ்டீவார்ட் பிராண்ட் உட்பட சில ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அவற்றிலிருந்து சில விலங்குகளை மீட்டு வர முடியும் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள் .இவ்வாறு மீட்கப்படவிருக்கும் விலங்குகள் பற்றி பார்ப்போம் 

 கேஸ்பியன் புலி : 
ஆசியாவில் அதிகம் இருக்கக்கூடிய கேஸ்பியன் புலியை மீட்டுக் கொண்டு வரப் போகிறார்கள். புலிகளின் இந்த இனம் 1960களிலேயே முற்றிலும் அழிந்து விட்டிருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய சைபீரியன் புலிகள் மூலமாக கேஸ்பியன் இனத்தை உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்கினால் கேஸ்பியன் புலியின் குணநலன்கள் மீட்க முடியுமா என்ற ஆராச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

அவ்ரோச்சஸ் : 
அவ்ரோச்சஸ் பார்க்க பயங்கரமானதாக இருந்தாலும், அவற்றை வீட்டு விலங்காகவே நம் முன்னோர் வைத்திருந்திருக்கிறார்கள். ஐரோப்பா,வடக்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இந்த விலங்குகள் அதிகம் இருந்திருக்கின்றன. அவ்ரோச்சஸ் டி என் ஏ மூலமாக மீண்டும் உருவாக்கப் போகிறார்கள் 

கிளி : 
கரோலீனா பராகீட் எனப்படுகிற இந்த கிளி வகை சிறியதாகவும் உடல் பச்சை நிறத்திலும் முகம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் இருக்கக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இந்த பறவை அதிகம் இருந்திருக்கிறது. கடைசிப்பறவை என்று அடையாளப்படுத்தப்பட்ட பறவை ப்ளோரிடாவில் 1904 ஆம் ஆண்டு இறந்து போனது. ஆனால் இந்தப் பறவையின் ஜீன்கள் வேறு சில பறவைகளிடம் இருப்பதாகவும் அவை மெக்சிகோ மற்றும் கரீபியன் தீவுகளில் இருக்கும் அதன் மூலம் இந்த கிளியை மீட்டுக் கொண்டுவர முடியும் என்கிறார்கள்.

 டோடோ : 
மொரீஷியஸில் வாழ்ந்த ஓர் பறவையினம். இங்கே வாழ்ந்த மக்கள் உணவுக்காக இதனை தொடர்ந்து அதிகபட்சமாக வேட்டையாடியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் டோடோ என்ற இனமே முற்றிலும் அழிந்து விட்டது. இதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் டோடோவின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்து டோடோவின் டி.என்.ஏ சேமிக்கப்பட்டிருக்கிறதாம். அதிலிருந்து டோடோவை உருவாக்குவோம் என்கிறார்கள். 

வுல் மாமூத் :
வுல் மாமூத் உறைநிலையில் பதப்படுத்தப்பட்டு செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அதோடு இதனுடைய டி.என்.ஏவைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி மாமூத் ஆர்டிக் பெருங்கடல் அருகே இருக்கக்கூடிய வாரங்கல் என்ற தீவில் வாழ்ந்திருக்கிறது. இந்த இனம் அழிந்து கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

வுல் ரினோசரஸ் : 
உடம்பில் அதிக முடிகளைக் கொண்ட ரினோசரஸ் ஐரோப்பா மற்றும் ஏசியாவில் அதிகம் இருக்கிறது. குளிர் பிரதேசங்களில் வாழக்கூடிய மக்கள் இதன் மூடிகளில் கோட், ஷூ ஆகியவற்றை செய்து அணிந்து வந்திருக்கிறார்கள். தங்களின் சுயநலனுக்காக வேட்டையாடப்பட்ட இந்த விலங்கினங்கள் மறுபடியும் கண்டிப்பாக கொண்டுவருவோம் என்கிறார்கள். 

ஹெத் ஹென் : 
வடக்கு அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இந்த பறவையினம் 1932களில் முற்றிலுமாக அழிந்து விட்டிருக்கிறது. வீட்டிற்கு விருந்தினர் வந்தால் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த பறவையைத் தான் ருசியாக சமைத்துப் போடுவார்களாம். உணவுக்காக அதிகமாக வேட்டையாடப்பட்டு இந்த இனம் முற்றிலுமாக அழிந்திருக்கிறது. 

ஐவரி வுட் பெக்கர் : 
இவை அமெரிக்காவின் தென்கிழக்கு நாடுகளில் வாழ்ந்திருக்கிறது. இந்த பறவையினத்தை 1940களுக்கு பிறகு யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் இந்த பறவை குறித்த ஆய்வுகளை யாரேனும் மேற்கொண்டால் ஐம்பதாயிரம் டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக ஓர் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது. 

இம்பீரியல் வுட் பெக்கர் : 
இந்த பறவையினம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக இந்த வகை பறவை யார் கண்ணிலும் சிக்காமல் இருக்கிறது. தற்போது அதிகாரப்பூர்வமாக இந்த பறவையினம் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதனையும் மீட்டுக் கொண்டு வர ஆய்வாளர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். 

மோவா : 
இந்த பறவை அதிகமாக நியூசிலாந்தில் இருந்திருக்கிறது. இந்த பறவையினம் குறைந்தது பன்னிரெண்டு அடி வரை வளரக்கூடியது. அதோடு இதன் எடை ஐநூறு பவுண்டை தாண்டிடும். இதனை உணவுக்காக எக்கச்சக்கமாக வேட்டையாடியிருக்கிறார்கள். தற்போது இந்த பறவையினத்தின் உறவு என்று சொல்லக்கூடிய பறவையை தென் அமெரிக்காவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் மோவாவின் ஜீன்கள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். 

ஐபெக்ஸ் : 
பார்க்க மானின் தோற்றத்தில் இருந்தாலும் இவற்றை பைரீனியன் ஐபெக்ஸ் என்று அழைக்கிறார்கள். இவை பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அதிகம் இருந்திருக்கிறது. இவற்றின் கடைசி விலங்கு ஜனவரி 2000ஆம் ஆண்டு இறந்தது. இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், க்ளோனிங் முறையில் கடைசியாக இறந்த பெண் விலங்கிடமிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மூலமாக புதிய ஐபெக்ஸ் உருவாக்கினார்கள் ஆனால் அது இறந்து விட்டது. இதனையும் மீட்டுக் கொண்டு வர தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

வரிக்குதிரை : 
இன்றைக்கு நாம் பார்க்கிற வரிக்குதிரை எல்லாம் கருப்பு வெள்ளையில் உடல் முழுவதும் வரிகளை கொண்டிருப்பதாகவே பார்க்கிறோம். ஆனால் ஆரம்பத்தில் வரியில்லாத, அல்லது உடலின் பாதியில் வரியுடனும் மீது ப்ளைனாகவும் இருக்கக்கூடிய வரிக்குதிரை இருந்திருக்கிறது. க்வாகா என்று அழைக்கப்படக்கூடிய இந்த விலங்கு தென்னாப்ரிக்காவில் வாழ்ந்திருக்கிறது. இதன் கடைசி விலங்கு 1883ல் இறந்து போனது,இதையெடுத்து 1987 ல் இந்த விலங்கு குறித்த ஆய்வுகள் துவங்கின.

 டால்பின் : 
இந்த வகை டால்ஃபினை ஃபிரஷ் வாட்டர் டால்ஃபின் என்று அழைக்கிறார்கள் அதோடு இதனை பைஜி என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த வகை டால்பின் சீனாவில் இருக்கும் யங்க்டீஸ் ஆற்றுப் பகுதியில் அதிகம் வாழ்ந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னரே இந்த வகை டால்பின் இனம் அழிந்து விட்டிருக்கிறது என்றாலும்,சிலர் இந்த இனம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்கிறார்கள், தொடர்ந்து ஆய்வினை மேற்கொண்டு இந்த விலங்கின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. 

ஐரிஷ் எல்க்ஸ் : 
இந்த வகை மான் தான் இதுவரை உலகில் பிறந்த மான்களிலேயே மிகவும் பெரியது. இவற்றின் சில ஸ்பைசஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை சைபீரியாவில் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. சிகப்பு மானில் கூட இவற்றின் சில ஜீன்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கிரேட் அக் : 
இந்த வகை பறவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவில் அழிந்து போனது. இவை வடக்கு அட்லாண்டிக் பகுதி மற்றும் கனடாவில் இருந்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தினாலும், துருவக் கரடிகள் வேட்டையாடியதாலும் , மனித வேட்டையினாலும் அழிந்திருக்கிறது. இங்கே பருவ நிலை மாற்றத்தினால் தான் துருவக் கரடிகள் இந்த பறவைகள் வாழ்ந்த இடத்திற்கு நகர்ந்திருக்கிறது, பருவ நிலை மாற்றத்திற்கு மனிதர்களே காரணம் என்கிறார்கள்.

 

Article By TamilFeed Media, Canada
2834 Visits

Share this article with your friends.

More Suggestions | WORLD